முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே நீண்ட நாட்கள் கருத்து மோதல் நிலவி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

கேரளாவில் போராட்டம்:

இந்த குழுவில் கேரளாவைச் சேர்ந்த 2 பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருப்பதால் அவர்களை நீக்க வேண்டும் என்று தமிழக - கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பென்னிகுயிக் மண்டபத்தில் விவசாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அப்போது, இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த அன்வர் பாலசிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஏபிபி நாடு நிருபர் நாகராஜ் இந்த போராட்டத்தில் யார்? யார்? பங்கேற்றனர்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விவசாய அமைப்புகள் பெயர்களின் கூறியதுடன், நில வணிகர் கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளதாக கூறினார். 

நிருபரிடம் தகராறு:

அப்போது, விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப்படுவதற்கு நிலத்தரகர்கள் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அன்வர் பாலசிங்கம் விளக்கம் அளித்தார். 

அப்போது, அங்கே இருந்த ஈசன் என்பவர் நீ அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை கேள்வி கேளு. நீ கேக்குற கேள்வி தப்பு? அப்படினு சொன்னாரு. விவசாய நிலங்கள் அழிப்புக்கு நாங்க காரணம்னு நீ எப்படி கேள்வி கேட்கலாம்? என்று நமது ஏபிபி நாடு நிருபர் நாகராஜை ஒருமையில் பேசினார். 

தாக்க முயற்சி:

அப்போது, அவர் ஒருமையில் பேசியதற்கு அங்கே இருந்த சக நிருபர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது, ஈசன் நிருபர் நாகராஜை நோக்கி அடிப்பதற்கு கை ஓங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

50 போலீசார் இருந்தபோதே நமது ஏபிபி நாடு நிருபர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நமது நிருபர் மீது தாக்க முயற்சித்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.