ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடந்தது என்ன?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (வயது 17) பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் முனிராஜ் ஒரு தலைபட்சமாக மாணவி ஷாலினியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இதனை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில் இன்று காலை வழக்கம் போல, அவர் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது இடையே வழிமறித்த முனிராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அலறிய மாணவி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஷாலினியைக் கொன்றது பட்டியலின இளைஞரா?

இந்த நிலையில் ஷாலினியைக் கொன்றது பட்டியலின இளைஞர் என்றுக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தலித் இளைஞரால் நிகழ்த்தப்பட்ட கொடூரம் என்றும் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

எனினும் இதில் உண்மை இல்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

இராமேஸ்வரத்தில் இன்று (19.11.2025) பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. கைதான நபரும், கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.

வெறுப்புப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.