சேலம் சாரதா கல்லூரி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய "சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைக்க, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அதனை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சேலம் ஆர்ஆர் பிரியாணி தமிழ்செல்வன், ஏரோஸ்பேஸ் நிறுவனர் சுந்தரம், சண்முகம் மருத்துவமனை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, "நான் பெற்ற 7 தேசிய விருதுகள் பெரிதுதான்; ஆனால் தமிழ் சொந்தங்களின் கர ஒலிக்கு அது ஈடாகாது. வைரமுத்து வந்ததால் சேலத்திற்கு பெருமை அல்ல. சேலத்திற்கு வந்ததால் வைரமுத்துக்குதான் பெருமை. கனிம வளத்தில் மட்டுமல்ல கனித வளத்திலும், மனித வளத்திலும் செழிந்த மண் சேலம் மண். கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இந்த மருத்துவமனை அரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் அரங்கம் என பெயர் சூட்ட கோரிக்கை வைக்கின்றேன் என்றால்.



மேலும், மருத்தும், தொழில், கலை, கல்வி என அனைத்து துறைகளிலும் தடம் பதித்த நபர்களை ஒரே புத்தகத்தில் இடம் பெறவைத்துள்ளார் செந்தமிழ் தேனீ. மனிதன் பொன், பொருள், பட்டத்திற்கு ஆசைப்படவில்லை. அங்கீகாரத்திற்குதான் ஆசைபடுகிறான். பாராட்டு இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது. வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் பாராட்டு முக்கியம். தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் படித்த இளைஞர்கள் அனைவரும் உங்கள் ஊரில் உள்ள சிறந்த நபர்களை உலகத்திற்கு அடையாளம் படுத்துங்கள் என வேண்டுகோள் வைத்தார். தமிழனுக்கு அனைத்து தகுதியும் உள்ளது. ஒருவரை பார்த்து மற்றொருவர் பொறாமை படாதீர்கள். ஆற்றலை வளர்த்து விடுங்கள். திறமையை நேர்மையாக கொண்டு செல்பவன் எதையும் வெற்றி கொள்கிறான். வறுமை தடை என ஒருவன் நினைத்தால் வாழ்க்கையை அவன் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். வறுமை தான் வாழ்க்கையை செதுக்குகிறது. வறுமை என்பது ஊக்கம், செல்வம், இயற்கை கொடுத்த கொடை. வைரமுத்து, இளையராஜா வறுமையில் வந்தவர்கள்தான். சாதிப்பதற்கும் வயதுக்கும் சம்மந்தம் இல்லை‌. இன்று நினைத்தால் நாளை சாதிக்கலாம். அம்பானி, அதானிதான் வேலை கொடுக்க வேண்டுமா? வேலை பெற வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல், வேலைக்கு ஆள் வேண்டும் என விளம்பரம் கொடுக்க வேண்டும், என்கிற சிந்தனையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பேசாத படங்கள்தான் சிறந்தது என்பது சார்லி சாப்ளின் எண்ணம். பேசும் படங்கள் வந்ததும் மொழி பயிற்சி முடிந்தது. காட்சியை மட்டும் பார்த்தால் மொழி என்னவாக இருக்கும் என யோசிக்கும் போதுதான் மொழி பயிற்சி அருமையாக கிடைக்கும். துயரம் இல்லாமல் எதுவும் இல்லை, வலி இல்லாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது. தமிழுக்கு, கதைக்கு, உழைப்புக்கு, இரும்புக்கு, கரும்புக்கு, தமிழ் மக்களுக்கு சிறந்த ஊர் சேலம்” என்று கூறினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து, "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மனிதகுல வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக வளர்ந்து வரும் பட்சத்தில் உலகம் இரண்டாக பிளவுப்படும். நடிகைகளை ஆபாசமாக சித்தரிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.


சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் புகழுக்காக ஆபாசமான பதிவிடுவது குறித்த கேள்விக்கு., ”புகழும், விளம்பரமும் நல்ல முயற்சியில்தான் வர வேண்டும். தீய செயலால் வளர முற்பட்டால் அது வளர்ச்சி கிடையாது. இளைஞர்கள் நல்ல விதமாக வளர முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.