தென் மாவட்டங்களை புரட்டி போட்ட கனமழை:
கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த வாரம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் எனவும் தென்காசி, கன்னியாகுமரி மக்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் உயிரிழந்த எருது, பசுக்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.50,000 வழங்கப்படும். முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு மானிய தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 வழங்கப்படுவதற்கான டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அறிவுறுத்தல்:
இந்த நிலையில், மின்சார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால் பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.
- நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
- வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.
- மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது.
- வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துவரக்கூடாது.
- மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.