தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாநல்லுார் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சென்ற மாதம் 19ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டம், மின்சார திருத்த சட்டம், சுற்றுசூழல் சட்டம், இவைகளை கடந்த சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளின் போன்களை ஓட்டுக்கேட்பது போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நாடாளுமன்றத்தை தோழமை கட்சியுடன் இணைந்து நடத்தி வருகிறது. இதில் மத்திய அரசு நிறைவவேற்றியுள்ள சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சமூக விரோதிகள், போலீசாரால் தேடப்படும் ரவுடிகள் தான் நிர்வாகிகளாக உள்ளனர். ஒட்டுமொத்தம் சமூக விரோதிகளின் கூடராமாக தமிழக பாஜக உள்ளது. பாஜகவினர் மீது எழும் குற்றசாட்டுகளில் இருந்து தப்பிக்க, மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், அதை கவசமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் என்பது வரவேற்கத்தக்கது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிரமாக முயன்று வருகின்றனர். கூட்டுறவு மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளில் அதிமுக, அரசு கோடிக்கான ரூபாய்களை முறைகேடு செய்தது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை நடத்தி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற உணர்வுடன் சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது 9 மாவட்டங்ளில் ஊராட்சி தேர்தல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்ளாக நடைபெறுகிறது. அதில் திமுகவுடனான கூட்டணி தொடரும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பிறகு கருத்துக்கள் கூறப்படும் என்றார்.
முன்னதாக காலையில் தொடங்கிய மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன் தேசிய கொடியேற்றினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் குமரப்பா தீர்மானங்களை முன்மொழிந்தார். மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் அவைத்தலைவராக தேர்வு பெற்றார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் ஒன்றிய குழு துணை தலைவர் கணேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நிம்மதி மற்றும் அனைத்து தோழமைக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.