சமையலும் காய்கறிகளும்
சமையல் என்றாலே முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், எனவே காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது ஏறி இறங்கும், அந்த வகையில் சமையலில் ருசியை கொடுக்க தக்காளி மற்றும் வெங்காயம் தான் முக்கிய காய்கறிகளாகும். இந்த இரண்டு காய்கறிகளின் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அதோ கதி தான். மாதம், மாதம் தக்காளி மற்றும் வெங்காயம் வாங்குவதற்காக குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி வைப்பார்கள். இதன் படி இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி 18 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனையடுத்து தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனைடுத்து விற்பனை விலையானது உயர தொடங்கியது. தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் 100 ரூபாயை தக்காளி விலையானது தொட வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி, வெங்காயம் விலை
இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 20 முதல்30 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது இதன் வரத்தும் குறைந்துள்ளதால் ஒரு கிலோ 40 ரூபாயை தொட்டுள்ளது. மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பீட்ரூட் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்ந்தது பச்சை காய்கறிகள் விலை
கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் தரத்தை பொறுத்து ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், தக்காளி 100 ரூபாய்க்கு ஒன்றரை கிலோவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்போதும் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்லும் மக்கள் தற்போது குறைவான அளவே வாங்கும் நிலைக்கு தளப்பட்டுள்ளனர்.