பாஜக போராட்டத்தில் மிரட்டும் வகையில் பேசி கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்னல் பாண்டியனின் பொறுப்பற்ற பேச்சு இந்திய இறையாண்மை மற்றும் பொது அமைதிக்கு எதிரானது என விமர்சனம் எழுந்தது. 


சர்ச்சைகுரிய வகையில், ராணுவ வீரர்களான தங்களுக்கு துப்பாக்கி சுடத் தெரியும், குண்டு வைக்க தெரியும், தமிழ்நாட்டில் அதை செய்ய நேரிடும் என பேசியது சர்ச்சையானது. இதையடுத்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


முன்னதாக, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டதற்கு எதிராக பாஜக நேற்று சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர். அதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன், “உலகின் மிகப்பெரிய மற்றும் ஒழுக்கமான ராணுவங்களில் இந்திய ராணுவமும் ஒன்று. அப்படிப்பட்ட ராணுவத்துடன் அரசு குளறுபடி செய்தால், அது தமிழக அரசுக்கோ, மாநிலத்துக்கோ நல்லதல்ல.


ராணுவ வீரர்களின் பொறுமையை அரசு சோதித்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும். அவர், “இதை நான் அன்புடன் சொல்கிறேன். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் வெடிகுண்டு வைப்பதிலும், சுடுவதிலும், சண்டையிடுவதிலும் வல்லுநர்கள். இந்த வேலைகள் அனைத்தையும் நாங்கள் நன்கு அறிவோம், ஆனால் அவற்றைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்த வேலைகளை செய்ய விடாதீர்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று கூறிய அவர், திமுகவை “பயங்கரவாத கும்பல்” என்றும், பிரபுவை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 


இதுகுறித்து செய்தியாளர்கள் கர்னல் பாண்டியனிடம் ஏன் இவ்வாறு கருத்து தெரிவித்ததாக கேள்வியெழுப்பிய போது அவர்களுடன் கர்னல் பாண்டியன் தகராறில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.