புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளை சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் கூறியதாவது:


சாலைகள், விமான போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, நீர்வழிகள், தளவாட உள்கட்டமைப்பு என 7 துறைகள் உள்ளடக்கி கதி சக்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நதி நீர் இணைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 5 நதிநீர் இணைப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமன்கங்கா- பிஞ்சால், பார்- தாபி- நர்மதை, கோதாவரி- கிருஷ்ணா, கிருஷ்ணா- பெண்ணாறு, பெண்ணாறு- காவிரி என 5 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதியுதவி பெற மாநிலங்களுடன் உடன்படிக்கை செய்யப்பட உள்ளது. அனைத்து வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்துக்கு பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்த நிதியாண்டில் 38 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல்முறையாக கங்கை கரையோரத்தில் ஐந்து கி.மீ அகலமான தாழ்வாரங்களில் விவசாயிகளின் நிலத்தை மையமாக வைத்து இயற்கை விவசாயம் தொடங்க இந்த நிதியாண்டில் திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் நாட்டிலுள்ள பல்வேறு ஆற்றங்கரையோரங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.


2023ம் ஆண்டு சிறுதானியங்களின் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கிராமப்புற நிறுவனங்களின் மூல நிதியை நபார்டு மூலம் அரசு வழங்கி உதவும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்காக 135 மடங்கு பட்ஜெட்டில் நிதி அதிகரிக்கப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 822 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிசான் சம்பதா யோஜனா திட்டத்துக்கும் 28 மடங்கு உயர்த்திப்பட்டு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.




சிறுதொழிற்சாலைகள் அமைக்க 80 சதவீத நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பொருட்களை உலகமே ருசிக்கும் வகையில் பிஎல்ஐ திட்டத்துக்கு ஆயிரத்து 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையில் முழு உலகுக்கும் இந்தியாவின் கதவை திறக்க விரும்புகிறோம். இந்தியாவை உலகம் முழுவதும் இணைக்கும் தென்னிந்தியாவின் சிறந்த நுழைவுவாயிலாக புதுவை உள்ளது.


மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்ப்பு, பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேட்கிறீர்கள். புதுவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாநிலம். புதுவையில் மத்திய அரசின் திட்டங்கள் 100சதவீத நிதி பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டு வருகிறது. புதுவை அரசு எந்த ஒரு திட்டத்தை மத்திய அரசுக்கு அளித்தாலும் அதை நிறைவேற்றி தருவோம். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகமும், தமிழகமும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வந்தால்தான் மத்திய அரசு அனுமதியளிக்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பிரகலாத்சிங் பட்டேல் தெரிவித்தார்.