மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை மயிலாடுதுறை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை முடிவுபெறவில்லை பல்வேறு விசாரணை தொடர்கிறது என எஸ்பி கூறிய நிலையில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமம் வடக்குதெரு பகுதியில் முனுசாமி என்பவரது குடும்பத்தினர் முனுசாமி, அவரது இரண்டு மகன் மற்றும் மருமகன் ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். மேலும் இந்த சாராய விற்பனை தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்துவந்துள்ளனர். ஆனால், பல முறை புகார் அளித்தும் இது தொடர்பாக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் குத்தி கொலை
இந்த நிலையில் சாராய விற்பனை குறித்து அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் தினேஷை தாக்கியுள்ளனர். இதனை கண்ட தினேஷின் நண்பர்கள் அதனை தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் 20 வயதான ஹரிசக்தி மற்றும் 25 வயதான பொறியியல் பட்டதாரி ஹரிஷ் ஆகியோரை சாராய வியாபாரிகள் தங்கதுரை, அவரது சகோதரர் மூவேந்தன் சாராயம் விற்பனை செய்து போலீசாரல் கடந்த 11 -ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த உறவினர் ராஜ்குமார் ஆகியோர் இளைஞர்களை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த சூழலில் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமாரை ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குடும்ப பிரச்சனை முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதாக மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டனர்.
எஸ்.பி. செய்தியாளர் சந்திப்பு
மேலும் இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்வவழக்கில் கொலை சம்பவம் நடந்த உடனேயே மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மூவேந்தன் தங்கதுரை ராஜ்குமார் ஆகிய 3 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் குற்றவாளிகள் சாராய விற்பனை செய்ததை தடுத்ததால் தான் கொலை சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையிலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இச்சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டார்கள் என்று தெரிய வந்தால் அவர்கள் மீதும் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான முறையான நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கொலைக்கான காரணம் என தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.
மேலும் ஒருவர் கைது
கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே ஒரே குடும்பத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரது தந்தையான சாராய வியாபாரி முனுசாமியை நான்வது நபராக காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்பூசணி கடைக்கு தீவைப்பு
இதனிடையே சம்பவம் நடைபெற்ற முட்டம் கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாரூர் பிரதான சாலையில் மஞ்சள் வாய்க்கால் பகுதியில் உள்ள தர்பூசணி கடையினை மர்ம நபர்கள் நள்ளிரவு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். கடையை கொளுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முட்டம் கிராமத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் அன்னக்கொடி தலைமையில் தற்போது போலீசார் 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.