கேரள மாநில மக்களின் மிகவும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது திருவோணம். இந்த பண்டிகை கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள கேரள மக்களால் அந்தந்த மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்ததன் காரணமாக ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதன்படி சேலத்தில் வசிக்கும் கேரளா மக்களும் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.
சேலம் தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரளா சமாஜத்தில் ஒன்று கூடிய கேரள பெண்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோலத்தைச் சுற்றிலும் பாரம்பரிய நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வழக்கமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் களைகட்டும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து சேலம் வாழ் கேரளா மக்கள் கூறுகையில், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக ஓணம் பண்டிகையை சேலத்தில் கொண்டாடி வருகிறோம். இங்குள்ள பலரும் தொழிலிற்காகவும், வியாபாரத்திற்காகவும், பெண்கள் திருமணம் ஆகி கணவருக்கு வீட்டிற்கு போன்ற காரணங்களால் கேரளாவில் இருந்து சேலம் வந்தவர்கள். தினசரி வேலைகள் பல இருந்தாலும் கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகையின் போது சேலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் கொண்டாடி வருகிறோம். ஓணம் என்பது மகாபலி சக்கரவர்த்தி ராஜாவாக இருந்தபோது நாட்டில் தீமை எதுவும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் செழிப்புடனும் வாழ்ந்தனர்.
அவரை நினைவூட்டும் வகையிலும், மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையின்போது பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்தப்பூ கோலமிட்டு அதைச் சுற்றி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக கூறினார்.
இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று அவர்களுடனும் ஓணம் பண்டிகை கொண்டாடி கேரளா உணவு பரிமாறப்படும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் விமர்சையாக கொண்டாடினர். சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓணம் பண்டிகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கேரளா மாநில பாரம்பரிய உடை அணிந்து, நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சேலம் மாநகர் சாஸ்தா நகரில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்கள் ஒன்று இணைந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தவர்.