செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின்படி அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் அனுப்ப உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய சட்டப்படி அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி எந்த அதிகாரமும் ஆளுநருக்கு கிடையாது. இதனை மிகவும் தெளிவாக முதலமைச்சர் கூறியுள்ளார். இன்று விளக்கமளிக்கும் வகையில் கடிதமும் அனுப்பப்பட உள்ளது. ஆளுநர் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு எடுத்து வருகிறார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என தெளிவாக கூறியுள்ளது. வேண்டுமென்றே ஆளுநர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை மத்திய உள்துறை அமைச்சரும் விளக்கியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியுள்ளார் ஆளுநர். இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சர்காரிய காலம் மூலம் திராவிட முன்னேற்ற கழகம் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றுள்ளது” என குறிப்பிட்டார்.


மேலும், “ செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை நடத்துவதில் எந்த தயக்கமும் இல்லை. அவரை மட்டும் தனியாக குறிவைத்து சிக்க வைப்பதன் அவசியம் என்ன என்பது தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டதால் மட்டும் அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட போது கூட அவர் தொடர்ந்து பதவி வகித்து வந்தார். மத்திய அமைச்சரவையில் ஒரு சில அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது, அவர்களை பதவி நீக்கம் செய்து விட்டார்களா என்ன? அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இந்த நடவடிக்கை செல்லாது, இதனால் தான் அதனை ஆளுநரே நிறுத்தி வைத்துள்ளார். யாரும் இந்த இயக்கத்திற்கு நெருக்கடி  தர முடியாது, அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திப்போம். முதலமைச்சர், ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில் ஒரு மில்லிமீட்டர் கூட குறை வைத்ததில்லை” என கூறியுள்ளார்.


அதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், “ ஆர்டிக்கல் 153, 154, 163 ஆகிய பிரிவுகளின் படி அமைச்சராக இருப்பவர்களுக்கு முதலமைச்சர் மட்டுமே அறிவுறை வழங்கலாம். உச்சநீதிமன்றத்தின் படி சட்டப்பேரவை படி ஆளுநர் நடக்கவில்லை என்றால் அவரது முடிவுகள் செல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் கடிதத்தில் அவர் அமைச்சராக இருக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை, அதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றாமல் ஆளுநர் தனிச்சையாக செயல்படுகிறார். நாளை நீதிபதிகளை கூட ஆளுநர் பணி நீக்கம் செய்வாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், “மத்திய அமைச்சரவையில் ஒருசில அமைச்சர்கள் மீது வழக்கு இருந்தாலும் அவர்கள் பதவியில் இருந்து வருகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தான் தொடர்கிறார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட இலாகா என்பது வேறு. அதுமட்டுமின்றி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.