Supreme Court: சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசின் மனு:


சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


"செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார்”


இந்நிலையில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, இரண்டு ரிட் மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோஹத்கி, பி.வில்சன் ஆஜராகினர்.  அப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.  சட்டப்பேரவையில் 2020ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மசோதாக்கல் கிடப்பில் இருக்கிறது.  பணி நியமனம்  தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார்.  


கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளை கூட ஆளுநர் கிடப்பில் போட்டு வைக்கிறார்.  அரசு பணிகளில் 14 முக்கிய பணிகளுக்கான காலி பணியிடங்களில் 10 பணியிடங்களை நிரப்ப அனுமதிக்காமல்  ஆளுநர் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார்.  As Soon As Possible என்ற வாக்கியத்தை தமிழ்நாடு ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு தவறாக செயல்படுகிறார்.  மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. 


"மசோதாக்களை கிடப்பில் போடக் கூடாது”


இதனை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தமிழக ஆளுநரின் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.  மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். மசோதாக்களை கிடப்பில் போடக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 




மேலும் படிக்க


Kalaignar Urimai thogai Thittam: புதிதாக 7.3 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000; கலைஞர் உரிமைத்தொகை 2ஆம் கட்டம் தொடக்கம்