சேலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறியது, "அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது மிகவும் பிரதானமான கோரிக்கையாகும். இந்த ஓய்வூதியத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்தது. அதேபோல் பல மாநில அரசாங்கங்களும் ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டார்கள். புதிய ஓய்வூதிய திட்டம் ஓய்விற்குப் பிறகு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எனவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உறுதியளித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை இதற்கு முன் ஆண்டவர்களும், இப்போது ஆளுபவர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கப்படும் என சொல்லி 20 ஆண்டுகளாக வழங்காமல் உள்ளனர். நாடு வளர்ந்திருக்கும் சூழ்நிலையில் 12 லட்சப் பணியிடங்களில் நான்கு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. நிரந்தர பணிகள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் என அடிமை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்துவிட்டு நிரந்தர ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். 



பொது விநியோகத் திட்டத்தில் வருவாய் துறை, கூட்டுறவு துறை, வழங்கல் துறை ஆகிய மூன்று துறைகள் செயல்படுகின்றனர். அதுமட்டுமின்றி எட்டு துறைகள் ஆய்வு செய்கிறார்கள். ஒரு பணியாளரை 21 பேர் ஆய்வு செய்யக்கூடிய அநாகரீகமான ஆய்வு தமிழகத்தில் இருந்து கொண்டு வருகிறது. பணியாளர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் பொருட்களை பொட்டலமாக தமிழக அரசு வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் நாட்டின் வருமானத்தில் கணிசமாக தொகையை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் 20 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. அரசு பணியாளர்கள் நியமனத்தில் புரோக்கர்கள் பல லட்சம் சம்பாதித்து வருகின்றனர். எனது அரசு வெளிப்படை தன்மையோடு பணியிடங்களை மற்றும் பணி மாறுதல்களை நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று முறை முதல்வரை சந்திப்பதற்கு முறையிட்டும். முதல்வர் இதுவரை சந்திக்கவில்லை. டிசம்பர் 22 தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பணியாளர்களை திரட்டி சென்னையில் முதல்வரை சந்திக்க முடிவு எடுத்துள்ளோம். நான்காவது முறையும் சந்திக்க மறுத்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் எங்கள் கோரிக்கைகளை வைத்து வர உள்ளோம்" என்றார்.



மேலும், பணியாளர்கள் நியமனம் மற்றும் பணியிட மாற்றங்களுக்கு அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் பணம் கேட்கின்றனர். எம் பி, எம் எல் ஏ லெட்டர் கொடுத்தால் மட்டுமே பணியிட மாற்றம் நடக்கிறது. நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வெளியில் உள்ள பொருட்களை வாங்கி நியாயவிலைக் கடைகளில் விற்கச் சொல்கிறார்கள். அதிகாரிகள் நியாயவிலை கடைகளில் உள்ள பணியாளர்களை கட்டாயப்படுத்தி தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய சொல்கிறார்கள். இதன் மூலம் அதிகாரிகளுக்கு அதிக கமிஷன் உள்ளதால் பணியாளர்களை கட்டாயப்படுத்துகின்றனர். பணியாளர்களை இதுபோன்று கட்டாயப்படுத்துவதால் தமிழகத்தில் மூன்று தற்கொலைகள் நடந்துள்ளது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது அரசு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.