தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தான ஒரு நபர் ஆணையத்தின் முழு அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி, 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடந்து போராட்டம் நடந்த நிலையில் 100-வது நாளான 2018, மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடும், கலவரமும் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், அதிமுக அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
2018 ஜூன் 4ம் தேதி விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையைத் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய நிலையில், 6 மாதம் கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு வழங்கியது. அதன்படி, கால அவகாசம் முடிவுற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து இன்று சமர்பித்துள்ளார்.