அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் சின்னம் தொடர்பான படிவத்தில், தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திடலாம்.
ஈபிஎஸ் சார்பில் இடைதேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுக்கு ஆதரவாக, அதிமுகவின் மொத்த பொதுக்குழு உறுப்பினர்களான 2,665 பேரில் 2,501 பேர் ஒப்புதல் கடிதம் வழங்கினர். இதுதொடர்பான ஆவணங்களை தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்தில் நேரில் சமர்பித்தார். அதைதொடர்ந்து தற்போது, தமிழ் மகன் உசேனை அதிமுகவின் அவைத்தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள அதிமுக வேட்பாளரான தென்னரசுவிற்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட உள்ளார். அதேநேரம் இந்த அவைத்தலைவர் அங்கீகாரம் என்பது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு மட்டுமே எனவும் தேர்தல் அணையம் விளக்கமளித்துள்ளது.
இதன் மூலம் அதிமுகவின் இரட்டை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதராவளரான தமிழ் மகன் உசேனை, அதிமுகவின் அவைத்தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது ஈபிஎஸ்-க்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதோடு, இரட்டை இலை சின்னம் முடங்கி இடைதேர்தலில் ஈபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் முடிவு அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.