இந்தியாவின் எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள், மகப்பேற்றுக்குப் பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.
இதுகுறித்து திமுக கூறி உள்ளதாவது:
ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022ஆம் ஆண்டின் குறியீடுகள் (EXPORT PREPARDENESS INDEX - 2022)
’’உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள்குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள்வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.
பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022- 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.
இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023ஆம் ஆண்டுக்கான விவரங்களை National Import — Export Record for Yearly Analysis of Trade என்று ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம்
கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையில்: கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில்தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 2975 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.
மருத்துவமனைகளில் மகப்பேறுகள்
ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின் படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில்மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில்தான் அதிகம்.
அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.
மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பு (ANTENATAL CARE)
குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும்குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப்பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில்உள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022- 2023 ஆம்ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.
இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது’’.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.