கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தங்களது ஊதியத்திலிருந்து கணினி மற்றும் இதர பொருள்கள் வாங்குவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொகை வழங்கியதை பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர்,  தன்னுடைய ஊதியத்திலிருந்து கூடுதலாக  கணினி வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். அதன் காரணமாக ரூ.4 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 




 


கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்களிடம் புலியூர் பேரூராட்சி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பள்ளி மேலான குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் ரூ.85167-க்கான காசோலையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வழங்கினார்கள். கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்காக சென்னை சேர்ந்த சச்சின் திரு.ராகுல் ஆகியோர் டிவி மற்றும் ஸ்மார்ட் போர்டு வாங்குவதற்காக ரூ‌.61000-ம், புலியூர் பேரூராட்சி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சி.கண்ணன் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பாக கணினி வாங்குவதற்காக ரூ.12667-ம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கூட்ட அரங்கத்திற்கு பயன்படுத்தும் வகையில் 100 எண்ணிக்கை கொண்ட நாற்காலிகள் வாங்குவதற்கு ரூ.11500-ம் என ஆக மொத்தம் ரூ.85167 -க்கான காசோலையினை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் வழங்கினார்கள்.


 




பள்ளியில் பணிபுரியும் 6 ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக தனது ஊதியத்திலிருந்து நமக்கு நாமே திட்டத்தில் பொருட்கள் வாங்குவதற்கு தொகையை அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்க செயல் இதே போல் பிற பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களுக்காக செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டியதுடன், ஆட்சியர் அவர்கள் தனது ஊதியத்திலிருந்து கூடுதலாக கணினி வாங்கும் வகையில் ரூ.15000 நிதியினை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கிய ரூ.15000, ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கிய தொகை ரூ.85167 ஆக மொத்தம் ரூ.100167 ஆகும். நமக்கு நாமே திட்டத்தை பொருத்தவரை நாம் ஒரு பங்கு நிதி வழங்கினால் தமிழ்நாடு அரசு 3 பங்கு நிதி வழங்கும் அந்த வகையில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் புலியூர் பேரூராட்சி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் ஆகியோர் உடன் இருந்தார்.