கரூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 17 பயனாளிகளுக்கு ரூ.32.60 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் 17 பயனாளிகளுக்கு ரூ 32.60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 497 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 58 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.2,900 மதிப்பீட்டில் நடைப்பயிற்சி உபகரணங்களும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.6,840 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், 6 கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிக்கு தங்களுடன் ஒரு உதவியாளர் வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையுடன் கூடுதலாக தலா ரூ.1000 க்கான ஆணைகளையும், கிருஷ்ணராயபுரம் வட்டம் கோவக்குளத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் பெட்டிக்கடை வைப்பதற்கு கடனுதவி கேட்டு இன்றைய தினம் மனுக்கள் அளித்திருந்தார்.
அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது விருப்புரிமை நீதியிலிருந்து ரூ.10,000-க்கான காசோலையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கிருஷ்ணராயபுரம் வட்டத்தை சேர்ந்த 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.8.67 மதிப்பீட்டில் ரூ.17.34 இலட்சம் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும், தாட்கோ சார்பில் 1 பயனாளிக்கு நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சத்திற்கான மானியத்துடன் கடனுதவித்தொகைக்கான ஆணைகளையும் ஆக மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ32,59,740 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்கள் வழங்கினார்கள்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial