தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


15.01.2023 மற்றும் 16.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.


17.01.2023 முதல் 19.01.2023 வரை:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 20  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 20-21  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நீலகிரியில் நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து, படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணத்தால் பனிபொழிவு தாமதமாக தற்போது துவங்கியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்படுகிறது. உறைபனி பொழிவு காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு காணப்பட்டது. குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா, காந்தள், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது பனி படிந்திருந்தது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் உறைபனியால் புல்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போல ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதனால் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.