மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜனவரி 31-ந் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கலந்துகொண்ட சென்னையை சேர்த்த பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஜனவரி 31-ந் தேதி கல்யாணராமன் மற்றும் மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

Continues below advertisement

இதனையடுத்து கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு கோவை எஸ்பி பரிந்துரை செய்ததை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமனின் மனைவி சாந்தி ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தனது கணவர் மீது குண்டர் சட்டம் தவறாக போடப்பட்டுள்ளதாகவும், அவதூறாக பேசியதற்கு குண்டர் சட்டம் போடமுடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் குண்டர் சட்டத்திற்கு எதிராக அரசிடம் அளிக்கப்பட்ட மனு உரிய நேரத்தில் பரீசிலிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பொங்கியப்பன் அமர்வு மனுதாரர் தரப்பில் குண்டர் சட்டத்திற்கு எதிராக அரசிடம் அளிக்கப்பட்ட மனு குறித்த நேரத்தில் பரீசிலிக்கப்படவில்லை என கூறி குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Continues below advertisement