மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதற்கான கட்டுமான ஒப்பந்தம் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டுமான ஒப்பந்தம்:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ஜிஎஸ்டி உடன் சேர்த்து 17 ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அறிக்கையின் படி, 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும், அதேநேரம், மருத்துவமனை முழுமையான பயன்பாட்டிற்கு வர 2028ம் ஆண்டு ஜுன் மாதம் வரை காலம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம்:
விண்ணப்பிப்பது தொடர்பான கூடுதல் ஆவணங்களை www.dgmarket.com, http://www.pmssy-mohfw.nic.in மற்றும் https://jipmer.edu.in/alims-madural ஆகிய இணையதள முகவரிகள் பயனாளர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 4ம் தேதி வீடியோ கான்ப்ரென்சிங் முறையில் நடைபெறும். செப்டம் 18ம் தேதி நண்பகல் 12 மணியுடன் டெண்டர் பெறுவது நிறைவடையும் எனவும், அதேநாளில் பிற்பகல் 3 மணியளவில் டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ல் அடிக்கல்:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கட்டுமானம் தொடர்பான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக இடையே கடும் வார்த்தை போர் நடந்து வந்தது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை திமுக கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தது. இது அந்த கட்சிக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலனையும் அளித்தது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு:
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒருபுறம் கட்சி ரீதியாக கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில், மறுபுறம் தமிழ்நாடு அரசு பல்வேறு முறை கடிதங்களையும் மத்திய அரசுக்கு எழுதியது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை திமுக எம்.பிக்கள் எழுப்பினர். மதுரை எய்ம்ஸ் உடன் அடிக்கல் நாட்டப்பட்ட, அதற்கு பின்பு அடிக்கல் நாட்டப்பட்ட வேறுசில மாநிலங்களில், மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடந்துவிடன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் தான், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது.