மத்திய கணக்காயர் குழு அளித்த அறிக்கையின்படி தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவை பொது கணக்கு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட 8 பேரும் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். அம்மையப்பன், கொரடாச்சேரி போன்ற பகுதிகளில் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது பழைய கட்டிடத்தில் குழந்தைகள் இருப்பதை கண்டு புதிய கட்டிடத்திற்கு மாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல குடவாசல் அரசு கலைக் கல்லூரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது...



 

எங்களுக்கு வழங்கப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறோம். அங்கன்வாடி மையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது புதிய கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது. 15 தினங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். குடவாசல் அரசுக் கல்லூரி 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டுதான் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை அரசு கையகப்படுத்த கூடாது என்று. கடந்த நான்கு வருடங்களில் பல்வேறு வேலைகளை குடவாசல் கல்லூரிக்கு செய்திருக்கலாம். ஆனால் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இதனால் அனைத்து சுமைகளும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொது பணித்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர் மற்றும் அறநிலையத் துறை செயலாளர் ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.



 

பத்தாண்டுகளாக நடைபெற்ற ஆட்சியில் நிறைய குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யவே வந்துள்ளோம். கடந்த அரசு வரைவு திட்டம், அனுமதி போன்றவைகளை சரியாக கையாளவில்லை. எனவே தான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனை மத்திய கணக்காயர் குழு கண்டுபிடித்து கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்தபின்னர் சட்டப்பேரவையில் அறிக்கையை சமர்ப்பிப்போம். அதனைத் தொடர்ந்து குடவாசல் அரசு உறுப்பு கலைக்கல்லூரி வடசேரியில் உள்ள கால்நடை மருத்துவமனை திருத்துறைப்பூண்டி அரசு உறுப்பு கலைக்கல்லூரி உள்ளிட்ட இடங்களை சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் உடனிருந்தனர், அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சட்டப்பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்