சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ராஜசேகர். இவரது பேரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை விசாரணை செய்ய வேண்டுமென கூறி, காவல் நிலைய அதிகாரிகள் காவல்நிலையத்தில் வைத்து அவரை விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் காவல்நிலையத்தில் இருந்த ராஜசேகருக்கு இன்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் ராஜசேகர் இறந்து விட்டதாக கூறி அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.
சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்
இதனையடுத்து ராஜசேகர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ராஜசேகர் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சந்தேக மரணமடைந்துள்ள ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்