புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்தில் இருந்து சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குபின் சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது.  4 மணிநேர போராட்டம் வீணாகி, சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.


நடந்தது என்ன?



புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை( CISF) வீரர்கள் அடிக்கடி பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த மையத்திற்கு அருகில் சில குடியிருப்புகள் இருப்பதாக  கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வழக்கம் போல அந்த பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலப்பட்டி கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி(11) என்பவர், அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பேரனுக்கு அவனது தாத்தா, உணவு அளித்த நிலையில், சிறுவன் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்துள்ளார். அப்போது, பயிற்சியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

 

இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. அதில் புகழேந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மற்றொரு குண்டு, வீடு ஒன்றின் உள்ளே நுழைந்தது. அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை உடனே தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சை தேவைப்படும் என்பதால் சிறுவன் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.