தவெக மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளை நேரில் அழைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் விருந்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில மக்களையும் கவனம் ஈர்த்தது என்று சொல்லலாம். ஒன் மேன் ஆர்மியாக விஜய் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தார் என்பதே நிதர்சனம். 


இந்த மாநாட்டிற்காக விவசாய நிலங்களை தேர்வு செய்து உரிமையாளர்களிடம் பேசி மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. இதற்காக 207 ஏக்கர் நிலம் விவசாயிகள் சார்பாக வழங்கப்பட்டது. அதில் 90 ஏக்கர் மாநாடு நடத்தும் பகுதிக்காகவும் மீதி இடங்கள் பார்க்கிங்கிற்காகவும் பயன்படுத்தப்பட்டன. 


இந்த நிலையில் தான் ஏற்கெனவே கூறியது போன்று விஜய் நிலம் வழங்கிய விவசாயிகளை குடும்பத்துடன் அழைத்து விருந்து வைத்து கவுரவித்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்தில் 46 குடும்பங்களில் இருந்து 200 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு சால்வை அணிவித்த விஜய் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தவெக நிர்வாகிகளும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். 


இந்த விருந்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் கூறுகையில், “விருந்து நன்றாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சி. ஏற்கெனவே சொன்னது போல் விஜய் விருந்து வைத்துள்ளார். நான் 2 ஏக்கர் கொடுத்திருந்தேன். கொடுக்கும்போது இருந்த மாதிரியே திரும்ப சரி பண்ணி கொடுத்துட்டாங்க. ரொம்ப மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார். 


விவசாயிகளுடன் வந்திருந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூறுகையில், “விஜய் சாரை பார்த்தேன். ஒயின்ஷாப் கடைகளை மூட வேண்டும் என சொன்னேன். சரி பண்ணலாம் என்று சொன்னார். டாஸ்மாக் வேண்டாம். அது கெடுதல். எல்லாரும் நல்லா இருக்கணும். விஜய் சார் திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும். என் நண்பர்களிடம் சொன்னேன். சந்தோஷப்பட்டாங்க. ஒயின்ஷாப் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். விஜய் முதலமைச்சர் ஆகவேண்டும். கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும்” என தெரிவித்தார். 


விவசாயிகளுக்கு வழங்கிய அறுசுவை விருந்தின் மெனு:


சாதம்
வடை
பாயாசம்
பொரியல்
சாம்பார்
வத்தக்குழம்பு
ரசம்
மோர்
அப்பளம்