அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் நாயுடு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் போது லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் என்ற கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உதயகுமார் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2017 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரியிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை வாங்கி பல அடுக்குமாடி கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பாக 50 கோடி ரூபாய் அளவில் எம்பி முதல் அரசு அதிகாரிகள் வரை லஞ்சம் கொடுத்தது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை புலனாய்வு உதவி இயக்குனர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, லேண்ட்மார்க் ஹவுசிங் சென்னை ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வருமான வரி ஆய்வின் போது வருமானவரித் துறை துணை இயக்குனர் சங்கர பாண்டியிடம் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அளித்த வாக்கு மூலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில் 50 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
14.16 ஏக்கர் நிலத்தை பழைய வீடுகளோடு வாங்கியதாகவும் அதில் பல அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு சிஎம்டிஏ அனுமதி பெறுவது பிரச்சினையாக இருப்பது தொடர்பாக கணக்கில் வராத செலவு மூலமாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ரொக்கமாக 50 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாகவும் தெரிய வந்தது.
அந்த அடிப்படையில் அரசியல் பிரதிநிதிகள் ஏழு பேருக்கு இரண்டு கோடி 95 லட்ச ரூபாய் பணமும், அரசு ஊழியர்கள் சிஎம்டிஏ, கழிவு நீர் மட்டும் அடிகால் வாரியம் கூட்டுறவு சங்கம் மின்சாரம் பதிவுத்துறை, சாலை வேலைகள் தொடர்பான அதிகாரிகள், விற்பனை வரி, மாநகராட்சி ஆகிய எட்டு அதிகாரிகளுக்கு 15 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரத்து 600 ரூபாய் பணமும், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு ரெண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும், இதர செலவுகள் என்ற அடிப்படையில் 31 பேருக்கு 31 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரத்து 525 ரூபாய் பணம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை கொடுத்த தகவலில் இருந்து தெரிய வந்தது.
குறிப்பாக லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் சென்னை பிரைவேட் லிமிடெட் மற்றும் கே எல் பி ப்ராஜெக்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்கள் உதயக்குமார் கெட்டபாலியா மற்றும் மணிஷ் பரமர் ஆகிய மூன்று பேரும் 490 கோடி ரூபாய் மதிப்பில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கி கட்டுமான பணிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் 370 கோடி ரூபாய் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டு 120 கோடி ரூபாய் பின்னி நிறுவனத்திற்கு ரொக்கமாக கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதில் லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உதயகுமார் மற்ற இரண்டு இயக்குனர்களிடம் இந்த கட்டுமானத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து தருவதாகவும் அதற்கு 50 கோடி ரூபாய் பணத்தை கே.எல்.பி ப்ராஜெக்ட் நிறுவன இயக்குனர்கள் கெட்டபாலியா மற்றும் மணிஷ் பரமர் ஆகியோரிடம் இருந்து ரொக்கமாக வாங்கியதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கே எல் பி ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் உதயகுமார் கெட்டபாலியா மற்றும் மனிஷ் பரமர் ஆகியோர் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை வாங்கி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் விவாகரத்தில் 50 கோடி ரூபாய் அளவிற்கு எம்பி முதல் அரசு அதிகாரிகள் பலருக்கும் லஞ்சம் கொடுத்த விவகாரம் முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, பெரம்பூர் பட்டாளம் ஸ்டாராஹன்ஸ் சாலையில் உள்ள கட்டுமானம் மற்றும் தொடர்பான கே எல் பி நிறுவன அலுவலகம், தியாகரய நகரில் உள்ள லேண்ட்மார்க் ப்ரோஜக்ட் நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் இடங்கள் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனையில் கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்களை வாங்கி மேற்கொண்ட பண பரிவர்த்தனை தொடர்பாக ஆவணங்களை கேட்டு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உதயகுமார் வருமானவரித்துறை இடம் தெரிவித்த தகவல் அடிப்படையில் 50 கோடி ரூபாய் பணம் யார் யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்பது குறித்த விவரத்தை அடிப்படையாக வைத்து அதற்கான பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில் இந்த இரண்டு கட்டுமான நிறுவனங்கள் 50 கோடி ரூபாய் பணம் கொடுத்த நபர்கள் குறித்த ஆதாரங்களை திரட்டி அதனை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட எம்பி முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரிடமும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கிடைக்க பெறும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்