கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.


மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு 


மது மற்றும் போதை ஒழிப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுமற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்துார்பேட்டையில் அக்டோபர் 2-ம் தேதி நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்துார்பேட்டையில் இந்த மாநாட்டிற்காக நாற்பது ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டது. திறந்த வெளி மாநாடாக இந்த மாநாட்டை நடத்த இருக்கிறது விசிக கட்சி. இந்த மாநாட்டை வடிவமைத்து, முழுமையாக நடத்தி முடிக்கும் பணியை விசிக -விற்காக வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தான் கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டையும் பிரமாண்ட முறையில் நடத்தி காட்டி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தனர். இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா தற்போது விசிகவின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதால் மாநாட்டு பணிகளை நேரடியாக அவரே கண்காணித்து வருகிறார்.


 


மாநாட்டில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள்!


இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஐம்பதாயிரத்திற்கு அதிகமாக சேர்கள் போடப்பட்டுள்ளது. எட்டு அடி உயரத்தில் தொலைவில் உள்ளவர்களும் காணும் வகையில் மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முகமாக புத்தரின் உருவம் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு, மாநாட்டு பந்தலின் பக்கவாட்டில் அம்பேத்கார் மற்றும் பெரியார், ஆகியோரின் படங்கள் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தலைவர்கள் தவிர, மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்த தலைவர்களின் கட்அவுட்கள் பிரமாண்ட முறையில் மாநாட்டு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. 


தலைவர்களின் பிரமாண்டமான கட்அவுட் 


அம்பேத்கார் ,பெரியார், காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு ஐம்பது அடியில் பிரமாண்ட் கட்அவுட் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளது. குடியால் குடும்பங்களை இழந்த பெண்களின் குரல்களை வார்த்தைகளாக பதிவு செய்து மாநாட்டு நுழைவு வாயிலில் பதாகைகளாக வைத்திருப்பது சிறப்பு.


போதைப்பொருள் தடுப்பு வாசகம் 


மாநாட்டு திடலின் இருபுறமும், மது மற்றும் போதை பயன்பாடுக்கு எதிராக தலைவர் பலரும் குறிப்பிட்ட கருத்துக்களை பதாகைகளாக வைத்திருக்கிறார்கள். மேலும் மதுஒழிப்புக்கு எதிரான கை யெழுத்து இயக்கத்தையும் இந்த மாநாட்டில் விசிக கட்சியினர் துவங்க உள்ளார்கள். 


அடிப்படை வசதிகளுடன் மாநாடு நடைபெறும்!


மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த பிரமாண்ட்ட இடம்,மாநாட்டு திடலை ஒட்டியே கழிவரை வசதிகள், தூரத்தில் இருப்பவர்களும் மாநாட்டு நிகழ்வை காண பிரமாண்ட எல்.இ.டி திரைகள் என நவீனத்தும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மாநாடாக இந்த மாநாட்டை வடிவமைத்துள்ளது வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம். அதிக அளவில் பெண்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.