தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முதன்முறையாக வேளாண்மைதுறைக்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. முதல்முறை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் தாக்கல் செய்தார். வேளாண் துறை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன் கூறுகையில்,
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண்மைத்துறைக்கு என தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. சாகுபடிக்கு பரப்பை அதிகப்படுத்துவது, நீர் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்துவது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கான விலை கிடைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக சாகுபடி செய்வது நெல் சாகுபடி ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 2100 விலை வழங்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சன்ன ரகத்தில் குவிண்டாலுக்கு ரூபாய் 70 கொடுத்தது வாங்கிய நிலையில் ரூபாய் 30 உயர்த்தி ரூபாய் 100 என ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளனர். மோட்டா ரகத்திற்கு ரூபாய் 50 வழங்கியதை மாற்றி ரூபாய் 20 சேர்த்து ரூபாய் 70 என ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளனர். இது போதுமானதாக இல்லை. ஊக்கத்தொகையை கூடுதலாக இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கருப்பிற்கு ஏற்கனவே மாநில அரசு வழங்கிய ஊக்கத்தொகையை, தனியார் தொழிற்சாலைகள் வழங்க மறுக்கிறது. இருந்தாலும், தேர்தல் நேரத்தில் 4000 விலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்கள்.
டன்னுக்கு ரூபாய்150 சேர்த்து ரூபாய் 42 ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூபாய் 2900 விலை நடப்பாண்டு கிடைக்கும். ஆனால் கருப்பிற்கு கூடுதலாக விலை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டே நெல்லுக்கு, 2100 ரூபாயும், கரும்பிற்கு ரூபாய் 4 ஆயிரமும் கொடுக்க முடியாது என்பது தெரியும். எனவே படிப்படியாக தமிழக அரசு விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. அரசே பூக்களை கொள்முதல் செய்து, வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கூறுகையில், வேளாண்மைத்துறைக்கு என 1991ஆம் ஆண்டு முதல் தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு அறிவித்துள்ளனர்.
ஆனால் நிதி நிலை அறிக்கை தனித்துவமிக்கதாக இல்லை. 18 ஆண்டுகளாக விவசாயித்திற்கு மின் இணைப்பு கேட்டு, பதிவு செய்து, இரண்டரை லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு புதிய மின் இணைப்பு, எவ்வளவு எண்ணிக்கையில் வழங்கப்போகிறோம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட வில்லை. அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நெல்லிற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 2500 விலை அறிவிப்போம் என்று திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். ஆனால் ரூபாய் 2060 தான் கொடுக்கின்றார்கள். கருப்பிற்கு டன்னுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆனால் அதுவும் ரூபாய் 2900 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர், இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
55 வயது கடந்த பெண், விவசாய பெண் தொழிலாளர்கள், 58 வயது கடந்த ஆண் விவசாயிகள் மற்றும் விவசாயித்தொழிலாளிகளுக்கு, மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசு ஏற்க வில்லை. கடந்த பிப்ரவரி மாதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் தள்ளுபடி திட்டம் ரூ.12,110 கோடி அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின் போது, 2016 ஆம் ஆண்டு வாங்கிய விவசாயிகளின் மத்திய கால மறுபயிர்கடன் சுமார்ரூ. 470 கோடி, விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அரசும் செயல்படுத்த வில்லை. தற்போதுள்ள திமுக அரசும் அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி வேளாண் மானியக்கோரிக்கை கூட்டத்தில் இதற்கான அறிவிப்புகளை வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறைகள் வெளியிட வேண்டும் என்றார்.