சென்னையில் போகி பண்டிகை ஒட்டி காற்றின் தரம் பல பகுதிகளில் மோசமாகி வருகிறது. 






”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர்.


ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த போகி பண்டிகையில் போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். அந்த வகையில், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற நச்சுப்புகை வெளியிடும் பொருட்களை நெருப்பில் போடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து வருகின்றனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இன்று முதலே களைக்கட்டியுள்ளது.


அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருப்பதால போகி கொண்டாட்டத்துடன் சேர்ந்து சென்னை முழுவதும் புகை மூட்டமாக மாறியுள்ளது. இதனால் சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணலியில் 287 புள்ளிகள் கொண்டு காற்றின் தரம் பதிவாகியுள்ளது. இது மிகவும் மோசமான குறியீடாகவும், இந்த காற்று சுவாசிக்க தரமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பெருங்குடியில் எண்ணூர் 226, அரும்பாக்கம் 207, ராயப்புரம் 195 என பதிவாகியுள்ளது.


காற்று தரக்குறியீடு 100 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது. 100 ஐ கடந்து பதிவானால் அது சற்று மாசடைந்துள்ளது என அர்த்தம். காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 இருந்தால் "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 இருந்தால் "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது.சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.