சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையம் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பலமாக உள்ளது. அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் தேசியளவில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும், இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றும் பேசினார்.


அதிமுக தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு எங்களிடம் நியாயம் இருந்தது. அதனால் தீர்ப்பு கிடைத்துள்ளது. கோடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம் ஊடகங்களில் கேட்பதும் தவறானது. சாலையில் செல்பவர்களை வைத்துக்கொண்டு ஊடகம் கேட்பது தவறு என்று கூறியவர், ஒரு ஆட்சி இருக்கும்போது, பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டுமென்றே இன்றைய ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது, அதிமுக சட்டத்தின் ஆட்சி நடத்தியது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பேசினார். தனபால் எப்படிப்பட்டவர் அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர், இதே இன்றைய ஆட்சியாளர்களே விசாரணை அழைத்து சென்று மூன்று மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர் என்றும் கூறினார்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று கனகராஜை இனியாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர், மீறி ஜெயலலிதாவின் ஓட்டுநர் என கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம், கனகராஜ் ஒருபோதும், ஒருநாள் கூட ஓட்டுனராக இருந்தவர் இல்லை எனவும் ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு எனவும் பேசினார். கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் மீது பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும் என்றார்.


மேலும், “நாடாளுமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கிறது, தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் எழுச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டத்தில் நடத்தமுடியாது என்று கூறினார்கள், ஆனால் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்கள், கழக நிர்வாகிகள் மக்கள் கலந்து கொண்டதில்லை. அந்தளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்தப்பட்டுள்ளது.இனியாரும் அதிமுக இரண்டாக, மூன்றாக சென்றுவிட்டது என்று கூறவேண்டாம், ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவைகள் மூலமாக தீர்ப்பு பெறப்பட்டது. எங்களது அதிமுக தரப்பில் உள்ளது என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக செய்தியை சிந்தாமல் சிதறாமல் செய்தி பதிவு செய்யுங்கள். சந்திராயன் 3 நிலாவில் இறங்கியது. நாட்டிற்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள் மற்றநாட்டை சேர்ந்தவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல என நிரூபணம் ஆகியுள்ளது. இந்திய வல்லரசு நாடாக உயர்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முன்னே நின்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். அதிமுக சார்பாக அவருக்கு பாராட்டு தெரிவித்துவிட்டோம். தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை” என்று கூறினார்.



தொடர்ந்து பேசியவர், “அதிமுக கொடி பயன்படுத்துவது குறித்த விவகாரம், அதிமுகவில் இனி ஒவ்வொன்றாக சட்டரீதியாக நடவடிக்கை வரும். சட்டத்தின் ரீதியாக எல்லாரும் செயல்படமுடியும், அவர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று கருதுகிறோம். அதிமுகவில் மீத முள்ளவர்களே இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒருசிலரை தவிர்த்து அதிமுகவிற்காக உழைத்தவர்கள், பிரிந்து சென்றிருந்தால் கட்சிக்குள் இணைத்து கொள்வோம். அதிமுக கட்சியின் ரீதியாக சிலர் வளர்ந்து அதிகாரத்திற்கு வந்து எப்படி இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவ்வாறு வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் விளைவித்துள்ளனர். இன்றைய ஆளும் கட்சியுடன் சேர்ந்து அதிமுகவை கெடுக்கவும், அழிக்கவும் நினைத்தவர்கள், எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடமில்லை. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டராக நின்றுதான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதிமுகவில் நின்று இரண்டு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்கட்சியில் பணியாற்றி வருகின்றனர். இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவன் நான் அவ்வாறுதான் நானும் செயல்பட்டு வருவதாகவும் பேசினார். அதிமுக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெறும் இதில் எந்த மாற்றமும் கிடையாது” என்றும் கூறினார்.