தேரை சூழ்ந்திருந்த தண்ணீரால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.  


தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11பேர் உயிரிழந்தனர். தேர் திருவிழா நிறைவடைந்து, அப்பர் கோயிலுக்கு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு விலகி நின்றதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.






தஞ்சை அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இங்கு 93 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்து வருகிறது. தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் களிமேடு. இங்குதான் மூன்று நாட்கள் அப்பர் சதய விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆண்டுதோறும் பெரியவர்களும், சிறியவர்களும் மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து தெருக்களின் வழியாக தேவாரப்பாடல்களை இசைத்தபடி சென்று அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வர். ஆண்டுதோறும் சித்திரை சதய விழா மூன்று நாட்கள் சிறப்பாக நடக்கும். அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 26ம் தேதி விழா தொடங்கியது. இதில் கடைசிநாளில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில்தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது


2 சிறுவர்கள் உட்பட 11 பேரின் விவரம்..


இறந்தவர்கள்..


1.மோகன் (22)
2.பிரதாப் (36)
3.ராகவன் (24)
4.அன்பழகன் (60)
5.நாகராஜ் (60)
6.சந்தோஷ் (15)
7.செல்வம் (56)
8.ராஜ்குமார் (14)
9.சாமிநாதன் (56)
10.கோவிந்தராஜ்
11.பரணி (13)