தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தேர் திருவிழா நிறைவடைந்து, அப்பர் கோயிலுக்கு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஊர்மக்கள் கூறுகையில், சாலையை விரிவுபடுத்தும்போது மின்கம்பிகளை அப்புறப்படுத்தாதே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் 4 பேர் மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்கு காரணம் என அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து தெரிவித்த இளைஞர் ஒருவர், '' கடந்த வருடம் வரை சாலை குறுகலாகவே இருக்கும். உயர் அழுத்த மின் கம்பி சாலையில் ஓரத்தில் இருக்கும். கோயில் நிர்வாகமும் சரியாக சாலையில் தேரை இழுத்துச் செல்வார்கள். இந்த வருடம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் மின்கம்பி சாலையில் நடுவே செல்வதாகவே இருந்தது. இதனைக் கவனிக்காமல் தேரை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் திருப்பும்போது மின்கம்பியின் உரசி விபத்து ஏற்பட்டது. மின் கம்பியை சாலை ஓரத்திலேயே மாற்றி அமைத்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என்றார்.
இதற்கிடையே, தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு விலகி நின்றதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தஞ்சை அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இங்கு 93 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்து வருகிறது. தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் களிமேடு. இங்குதான் மூன்று நாட்கள் அப்பர் சதய விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.