தஞ்சையை அடுத்துள்ள  மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட  விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த  பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை, செய்து கொண்டார்.  மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, தூய இருதய அன்னை சபை தலைமைதலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,"முருகானந்தம் குடும்பத்தாரையோ வேறு எவரையுமோ குறை கூறும் விதமாக இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறான குற்றச்சாட்டு முந் வைக்கப்பட்டுள்ளதால் மட்டுமே இந்த மனுவைத் தாக்கல் செய்கிறோம் என கூறியிருந்தார். அதோடு சீலிடப்பட்ட கவரில் ரகசிய மனுவும் தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், " இதுவரை 53 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. தடய அறிவியல்  துறையின் அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. ஆகையால், முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரப்பட்டது. 

 

மனுதாரர் தரப்பில், " பெற்றோரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. விடுதியில் பூச்சி மருந்து எளிதாக எவ்வாறு கிடைத்தது? மாணவி படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு அவருக்கு வேலையும், தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

தஞ்சை காவல் கண்காணிப்பாளர், மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தவில்லை என ஊடகங்களில் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஊடகங்களில், "மதம் மாற கட்டாயப்படுத்தப்படவில்லை"என தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ விசாரணையின் திசையை மாற்றும் விதமாக உள்ளது. ஆகவே வழக்கை விசாரிக்கும் காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது." என வாதிடப்பட்டது.

 

அரசுத்தரப்பில், "15ஆம் தேதி அவரை பரிசோதித்த அரசு மருத்துவரே ஸ்கேன் மூலமாக கண்டறிந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து நீதித்துறை நடுவர் முன்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. முத்துவேல் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை. அவர் ஒத்துழைத்தாலாவது எத்தனை வீடியோ எடுக்கப்பட்டது? எத்தனை செல்போன்களில் பதியப்பட்டது? யார் யாருக்கு பகிரப்பட்டது என்பது தெரியவரும். வீடியோவை மாணவியின் இறப்பிற்கு பின்பு பரப்புவதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் பிரச்சனையை உருவாக்குவதற்காகவே. உண்மையில் நீதியை விரும்பியிருந்தால், வீடியோவை எடுத்த அன்றே பரப்பியிருக்கலாமே? என கேள்வி எழுப்பப்பட்டது" என  வாதிடப்பட்டது.

 

திரு இருதய அன்னை சபை தரப்பில், " சிறந்த மாணவியை இழந்துள்ளோம். மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை கருத்தில் கொண்டு ரகசிய அறிக்கையாக சில விபரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். கடந்த 160 ஆண்டுகளாக கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. பல மில்லியன் குழந்தைகள் எங்களின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். அவர்களில் பலர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்களும் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த மாணவியின் மரணம் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதன் காரணமாகவே நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அரசியலாக்கப்பட்டு வருகிறது.

 

ஊரடங்கிற்கு பின்னர் மாணவி பள்ளிக்கு  வராத நிலையில்,  பள்ளியே அவருக்கான கட்டணத்தை செலுத்தி மீண்டும் பயில வைத்தது. மாணவியின் கல்வி மற்றும் மருத்துவ செலவு முழுமையாக பள்ளியை நடத்திய சகோதரிகளாலேயே பார்க்கப்பட்டது. ஆனால் அவரது சித்தி அந்த மாணவியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினார். அது குறித்து விரிவாக விளக்க விரும்பவில்லை. தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அரசியல் காரணத்திற்காகவே இதில் எங்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது" என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

 









 

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கு - யார் முன்பு பட்டியலிட வேண்டும் என்பதை பரிசீலனை செய்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

 

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வடக்கு பகுதியை சேர்ந்த முத்துராமன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அண்ணாமலை புதூர் பகுதியில் 2022 பிப்ரவரி 9ஆம் தேதி சேவல் சண்டை போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 2022 ஜனவரி 28ஆம் தேதி சேவல் சண்டை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

 

இரண்டு சேவல் சண்டை களம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேவல் கால்களில் கத்தி கூர்மையான எந்த ஒரு பொருளும் மாற்றப்படாமல் வெறும் கால்களில் சேவல் சண்டையானது நடத்தப்படும். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் சேவல்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதனை சரிசெய்ய விலங்கியல் மருத்துவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சில தினங்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சேவல் சண்டை நடத்த அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

 

எனவே, தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அண்ணாமலை புதூர் பகுதியில் பிப்ரவரி 9ஆம் தேதியும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனவரி 28ஆம் தேதியும் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும்." என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு, ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை போட்டிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் இந்த வழக்குகளை யார் முன்பு பட்டியலிடுவது என பரிசீலித்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.