திருநங்கையை காதலித்து திருமணம்
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கோனியகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிங்குராயர் ( வயது 56 ) இவரது மகள் கிரேஸ் மேரி ( வயது 32 ) இவருக்கும் உதாரமங்கலம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த நெல்சன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் உதாரமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கின்றனர். சிங்குராயர் அவ்வப்போது மகளை பார்க்க உதாரமங்கலம் சென்று வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று முன்தினம் மகளை பார்ப்பதற்காக சிங்குராயன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். மணிகண்டன் மீது சில குற்ற வழக்குகள் உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது மனைவியுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு வீட்டிற்கு திரும்ப சென்றுள்ளார்.
" என்ன தான் பண்ணுவானோ "
மணிகண்டனை வழி மறித்து அவரது நண்பர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்த போது , தனது மருமகன் நெல்சனுடன் அவ்வழியாக சென்ற சிங்குராயர் , மணிகண்டனையும் அவரது மனைவியையும் பார்த்து "திருநங்கை கூட போய் கல்யாணம் , என்ன தான் பண்ணுவானோ " என கேலி செய்து பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த மணிகண்டன் சகோதரர் அருண்குமார் தட்டி கேட்டு போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்துள்ளனர்.
அரிவாள் வெட்டு - சம்பவ இடத்திலேயே பலி
ஆத்திரம் குறையாத மணிகண்டன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தனது நண்பர்களுடன் வந்து சிங்குராயரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிங்குராயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மெலட்டூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
