Minister Thangam Thennarasu: என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களில் புகுந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


தங்கம் தென்னரசு விளக்கம்:


இந்நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”கால்வாய்  தோண்டும் பணிக்காக 6 கிராமங்களில் இருந்து என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இன்னும் 30 ஏக்கர் நிலம் மட்டுமே என்.எல்.சியிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது. என்.எல்.சி. சுரங்கப் பணிகளை மேற்கொள்ள பரவனாறு மாற்றுக் கால்வாய் பணி அவசியமாக இருக்கிறது. இந்த மாற்றுப்பாதை அமைக்கப்பட்டால் தான் சுரங்க பணிகள் மேற்கொண்டு நடைபெறும். சுரங்கத்தில் மற்ற பணிகள் நடந்ததால் தான் மின்சாரம் உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். 2006 முதல் 2013ஆம் ஆண்டு வரை 352 விவசாயிகளிடம் இருந்து 104 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  இந்த 104 ஹெக்டேர் பரப்பளவுக்குள் வரக்கூடிய 382 விவசாயிகளுக்கு 6 லட்ச ரூபாய் வழங்கப்படும் நிலையில், 10 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்றார்.


”அதேபோன்று, 2006 முதல் 2013ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 405 விவசாயிகளிடம் இருந்து 83 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஏக்கருக்கு ரூ.2.6 லட்சமும், ரூ.14 லட்சம் கருணை தொகையும் வழங்கப்பட உள்ளது. 2000ஆ ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 311 விவசாயிகளிடம்  இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஏக்கருக்கு 2.4 லட்ச ரூபாய் வழக்கப்பட்டுள்ளது.  நிலம் கையகப்படுத்தப்பட்ட 311 விவசாயிகளுக்கும் தற்போது ரூ.6 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். 


கண்டனம்:


தொடர்ந்து பேசிய அவர், ”என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சி அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக் களமாக வெடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.  என்.எல்.சிக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறினார்கள். ஆனால்  தற்போது அங்கு வன்முறை வெடித்துள்ளது. விவசாயிகளை கேடயமாக வைத்துக் கொண்டு நடத்திய போராட்டம் கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே ஒரு பிரச்சனையை பேசி தீர்வு காண முடியாமல் இதுபோன்று வன்முறையை கையில் எடுத்துள்ளனர். வன்முறையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.


பொது அமைத்திக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஜனநாயாக ரீதியிலான அமைதி போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பெரும் வன்முறையை கிளப்பியது கடும் கண்டனத்திற்குரியது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.