”தமிழ்நாடு ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார்; ஆரியத்திற்கு ஆதரவாகவும், திராவிடத்திற்கு எதிராகவும் செயல்படுகிறார்” என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார். 


திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கருத்து தெரிவித்ததற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான பதிலளித்துள்ளார்.


அமைச்சர் தங்கம் தென்னரசு, வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆளுநரிடம் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மசோதாக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என ஆளுநர் பொய் சொல்லுகிறார். ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதி பூங்காதான். திருக்குறளை திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்பதை மறைக்கிறார். கமலாலயத்தில் உட்காந்திருக்க வேண்டியவர்” என சாடியுள்ளார்.


திராவிட மாடல் - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு


அவர்கள் நான் திராவிட ஆட்சி முறையைப் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினர். முதலாவதாக, அத்தகைய மாதிரி ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும் தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே உள்ளது.  'ஒரே பாரதம், ஒரே இந்தியா' என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் திராவிட மாடல் சித்தாந்தம்.


தேசிய சுதந்திர போராட்டத்தை சுட்டிக் காட்டும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராளிகள், தங்கள் உயிரையும் எல்லாவற்றையும் கொடுத்த வரலாறு மற்றும் நினைவிலிருந்து எப்படி அழிக்க முற்படுகிறது?.  மாறாக மொழி, இனவெறியை செயல்படுத்தும் கொள்கையாளர்களை அது மகிமைப்படுத்துகிறது.


சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது என கூறப்பட்டுள்ளது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் சூழல் அமைப்பை உருவாக்கிய ஒரு கருத்தியல் ஆகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்திருந்தார்.


ஆளுநரின் சர்ச்சை பேச்சிற்கு பலரிடமிருந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:


”ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார் ஆர்.என்.ரவி; மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம்; எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களை பேசி வருகிறார் ஆளுநர்".  என்று அமைச்சர் தென்னரசு கடுமையான பதிலளித்துள்ளார்.


ஆளுநர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே ஆளுநர் செய்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர,தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல. அநதப் பதவிக்கு வந்தவர், அதன் தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தனி ஆர்வத்தனம் காட்ட முனையக் கூடாது. 


” தமிழ்நாடு அரசு எத்தனையோ மசோதாக்களை தனக்கு அனுப்பிவைத்துள்ளது. அவற்றில் எத்தனை தன்னிடம் நிலுவையில் உள்ளது என்ற கேள்விக்கு .” தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை’ என்ற பொய்யான தகவலை பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து, பின்னர் அவரே எட்டு மசோத்தாக்களைத்தான் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்.


நிலுவையில் இருப்பதற்கும், நிறித்தி வைத்திருப்பதற்கும் உள்ள சட்ட வித்தியாசத்தை அவர்தான் விளக்க வேண்டும்.இன்றைய நிலவரப்படி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதக்களில் ஏழும், அதற்கு முன்பு அனுப்பட்ட 10 மசோதாக்கள் என மொத்தம் அவரிடம் 17 மசோதாக்கள் உள்ளன. ” என கேள்வி எழுப்பியுள்ளார்.