தாய் மாமன் சீர்- ஒரு கிராம் தங்க மோதிரம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாய் மாமன் சீராக, பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தது.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்
அந்த வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் பிறந்தநாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க வெளிநாடு பயணம் சென்றதால் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைக்கவுள்ளார். அந்த வகையில் இந்த திட்டத்தில் யார் யார் பயன்பெறலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்,
யார் யாருக்கெல்லாம் ஒரு கிராம் தங்க மோதிரம்.?
புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு 22 காரட் ஹால்மார்க் தரத்திலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளின் கீழ் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மட்டும் 89 ஆயிரத்து 955 தங்க மோதிரங்களை தயாரித்து முதற்கட்டமாக வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. மொத்தப் பிறப்புகளில் 99.9% மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களாக உள்ளன. இதில், அரசு சுகாதார நிலையங்கள் ஏறக்குறைய 4.2 லட்சம் (53%) பிரசவங்களை மேற்கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஒரு பிரசவத்திற்கு ஆகும் சராசரி செலவு ரூ.63,473/- ஆக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் அது வெறும் ரூ.1,364/- மட்டுமே என்று தேசிய மாதிரி ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாய் மாமன் தங்க மோதிர திட்டம்- தேவைப்படும் ஆவணங்கள்
1. குடும்ப அட்டை (Ration Card); 2. வாக்காளர் அடையாள அட்டை; 3. ஆதார் அட்டை; 4. தொழிலாளர் நல வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை; 5. அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட "முகவரிச் சான்று அட்டை" (Proof of Address Card); 6. பிறப்பிடச் சான்றிதழ்.
தகுதியானவர்கள் யார்.?
1.தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.
2. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும்.
3. தாய், RCH ID உடன் PICME-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
4. பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.
