நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தோல்வி பயத்தால் தென்காசி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குலசேகர மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அமல்ராஜ். அவரின் மனைவி வெண்ணியார். இந்தத் தம்பதிக்கு ராஜலெட்சுமி (21) என்ற மகள் இருந்தார்.


3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 முடித்த மாணவி ராஜலட்சுமி, அப்போதில் இருந்து நீட் தேர்வை எழுதி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த ஆண்டு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தவர், நம்பிக்கையுடன் 3ஆவது முறையாகத் தேர்வை எழுதி இருந்தார். 


இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு  முடிவுகள் செப்டம்பர் 7 தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்சர் கீ கடந்த 31ஆம் தேதி இரவு வெளியானது. அதில் தன்னுடைய விடைகளைச் சரிபார்த்த ராஜலட்சுமி, மதிப்பெண்கள் குறைவாக இருப்பதை அறிந்தார். 




இதனால் மன அழுத்தத்துடன் இருந்த மாணவி ராஜலட்சுமியைப் பெற்றோர் சமாதானப்படுத்தினர். எனினும் மாணவி ராஜலட்சுமி திடீரெனத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் ராஜலட்சுமி உடலைப் பார்த்து, கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சேந்தமரம் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், மாணவி ராஜலட்சுமி உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


நீட் தேர்வு தோல்வி  பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலசேகர மங்கலம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை குறித்து சேந்தமரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே நீட் தேர்வில் தோல்வி அச்சத்தால் மாணவி ராஜலட்சுமி தற்கொலை செய்த நிலையில், அடுத்து, நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூன்று மாணவர்கள் நடப்பு ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் 4ஆவதாக மாணவி ராஜலட்சுமி உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை தீர்வல்ல


எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவி மையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050