" ஊட்டியில் சுற்றுலா - தேட வேண்டாம் "
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த வலசை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) கூலித் தொழிலாளியான இவர் கடந்த 6 - ம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி சேர்ந்தமரம் போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.
அப்போது மகேந்திரனின் நண்பர்கள் அவருக்கு போன் செய்து உங்களது கணவருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளோம் தேட வேண்டாம் என கூறினர். இதை உண்மை என நம்பிய புவனேஸ்வரி , போலீசில் புகார் கொடுக்காமலே வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், 10 தினங்கள் கடந்த போதும் மகேந்திரன் வீட்டிற்கு வராததுடன் செல்போனிலும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த புவனேஸ்வரி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கடந்த 14 - ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் வாலிபர் மாயம் என வழக்குப் பதிந்து போலீசார் தேடி வந்தனர்.
முள் செடியில் தூக்கி வீசப்பட்ட சடலம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகேந்திரனின் மொபட், மேலகடையநல்லூர் – காசிதர்மம் செல்லும் சாலையில் குளத்துக்கரை அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, மேல கடையநல்லூரைச் சேர்ந்த 3 சிறார்கள் உட்பட 4 பேர் மகேந்திரனை கொலை செய்ததுடன், அவரது உடலை கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மடத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத முள்செடிகள் நிறைந்த பகுதியில் சிறிய கிணற்றில் போட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 3 சிறார்களை அழைத்துச் சென்று அந்த கிணற்றில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கத்திக் குத்து காயத்துடன் கிடந்த மகேந்திரன் உடலை கைப்பற்றினர். ஆனால், தலையை காணவில்லை. குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் புதைத்ததாக சிறார்கள் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்று தலையை மீட்டனர். இதையடுத்து வாலிபர் மாயம் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது ;
மகேந்திரனுக்கு மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிறுவனுடன் பழக்கம் இருந்துள்ளது. மது அருந்த சிறுவனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவனிடம் மகேந்திரன் ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் மற்றொரு சிறுவனை செல்போனில் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். பின் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து மகேந்திரனிடம் சண்டை போட்ட போது மகேந்திரன் இருவரையும் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் 23 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை அழைத்து வந்துள்ளார். நான்கு பேரும் சேர்ந்து மகேந்திரனை தாக்கியுள்ளனர்.
மயங்கி விழுந்தவரை கடையில் கத்தி மற்றும் கயிறு வாங்கி வந்து வயிறு பகுதியில் கத்தியால் குத்தியும் தலையை துண்டாக வெட்டியும் கொலை செய்துள்ளனர். உடலை அருகில் இருந்த ஒரு கிணற்றில் கயிற்றை கட்டி தள்ளி விட்டு, தலையை ஒரு பேக்கில் வைத்து குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் அருகே புதைத்துள்ளனர். பின்னர் இரவில் அங்கு உள்ள விடுதி ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
