திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண நிகழ்ச்சியில் முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை மிஞ்சும் வகையில் ஊருக்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவம்

பேனர் வைப்பதில் தகராறு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் மாதா கோவில் தெருவில் உள்ள திருமண வீட்டில் பேனர் கட்டுவது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மது போதையில் வந்த ஒருவர் தகராறில் ஈடுபட்ட நிலையில் , ஊர் பெரியவர்கள் தலையிட்டுப் பிரச்சினையைச் சமரசம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் மாலை திருமண வீட்டின் அருகே மேளதாளத்துடன் பொது மக்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரென முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் அரிவாள்களுடன் ஊருக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கண் மூடி தனமாக வெட்டிய கும்பல்
கூட்டத்தினர் அலறியடித்து ஓடிய நிலையில், கும்பல் கண்ணில் பட்டவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அருகிலுள்ள கடை ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் ( லயது 49), அவரது மகன் அருள்மாறன் ( வயது 23), சந்தோஷ்குமார் ( வயது 21 ), ராயப்பன் ( வயது 18 ), ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் ( வயது 20 ) மற்றும் திருமண நிகழ்ச்சிக்காக மேளம் வாசிக்க வந்த மாடசாமி ( வயது 19) ஆகிய 6 பேர் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் படுகாயமடைந்தனர்.
மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதி
தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ரமேஷ், அருள்மாறன், ராயப்பன் மற்றும் ராம்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கும்பல் தப்பிச் சென்ற காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே 4 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண வீட்டில் புகுந்து நடத்தப்பட்ட இந்த அரிவாள் தாக்குதல் சம்பவம் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















