தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,021 அரசு மருத்துவர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை சென்னை உயர்நீதி மன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என 14 பேர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ இயக்குனரகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் அனைத்தும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்படும் என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில்  காலியாக உள்ள 1,021 மருத்துவ பணியிடங்களுக்கான எம்ஆர்பி தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்  25ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வில் 25,000 மேற்பட்ட மருத்துவர்கள் எழுதினர்.


எம்ஆர்பி தகுதி தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் மூலம்  கூடிய விரைவில் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1021 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்  மா. சுப்பிரமனியன் அறிவித்திருந்தார். இதற்கடுத்து எம்ஆர்பி தேர்வின் மூலமாக 1021 மருத்துவர்களும் நேரடியாக நியமிக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 


தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மருத்துவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தது. மேலும், கொரோனா காலகட்டத்தில் பணி புரிந்த மருத்துவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் காத்திருந்த மருத்துவர்கள், இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கினை இன்று அதாவது ஜூலை 20ஆம் தேதி உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,021 அரசு மருத்துவர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என 14 பேர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ இயக்குனரகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.