தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தொகுதி மறு சீரமைப்பு எதிராக அரசியல் கட்சி தலைவர்களை ஒன்று திரட்டி ஆலோசனை கூட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, அருண் நேரு உள்ளிட்ட திமுக குழுவினர் டெல்லியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து மறு சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ரேவந்த் ரெட்டி ஏற்றுக்கொண்டார்.

Continues below advertisement

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு குழுவை அனுப்பி, மறு சீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டும் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பேன்.  தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது. தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். வட மாநிலங்களை விட தென் மாநிலங்களுக்கு மத்திய அரசுக்கு அதிக வரியை செலுத்துகிறது.

தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுக்கிறேன். நடக்கப்போவது தொகுதி சீரமைப்பு மட்டுமல்ல. தென் இந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. இதை நாங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தென் மாநில மக்கள் பாஜக வளர்வதை விரும்பவில்லை. அதனால் பாஜக தொகுதிகளை குறைத்து அவர்கள் வளர்ந்துள்ளதாக காட்டிக்கொள்ள இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. கொள்கை அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.