தேஜஸ் என்ற பெயரில் சொகுசு ரயிலை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது ரயில்வேத்துறை. தேஜஸ் என்ற பெயருக்கு ஏற்றார் போலவே அதிவிரைவு பயணத்தை மேற்கொள்ளும் இந்த ரயிலில் சாதாரண கோச்சுகள் இல்லாமல் முழுவதும் ஏசி கோச்சுகளாக அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் ஒரே நாளில் பயணம் மேற்கொள்ளும் இந்த வண்டியின் பயண நேரம் சுமார் 6 மணி நேரம் தான். மதுரையில் கிளம்பினால் திருச்சி, திண்டுக்கல் அடுத்தது எழும்பூரில் தான் நிறுத்தப்படும். ஆரம்பத்தில் இந்த ரயிலுக்கு பெரிய வரவேற்பில்லை என்றாலும் பின்னர் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த ரயில் சேவை, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. ஒரே நாளில் மதுரை சென்று திரும்ப வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த ரயில் வசதியாகவே இருந்தது. ஆனால், இந்த ரயில் மாதம் சுமார் ஒரு கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.




சென்னையைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தேஜஸ் ரயில் இயக்கம் தொடர்பாக பல கேள்விகளை கேட்டிருந்தார். அதில், தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுமா? ரயில் இயங்கத் தொடங்கிய 2019 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின? இதனால் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அதில் கேட்டிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகம், தேஜஸ் ரயிலில் சுமார் 20% முதல் 40% வரை இடங்கள் காலியாகவே இயங்குகின்றன என்றும், இந்த ரயில் இயங்கிய 19 மாத காலகட்டத்தில் சுமார் 18 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. அதே போல தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டால் சுமார் 10 நிமிடங்கள் கால தாமதம் ஏற்படும் என்பதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நிற்காது என்று பதிலளித்துள்ளது.




சென்னையைப் பொறுத்தவரை ரயில் பயணத்தில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகியவை முக்கிய சந்திப்புகள் என்பதால் எல்லா ரயில்களும் அந்த ஸ்டேஸனில் நின்று செல்லும். அதே அளவிற்கு பயணிகள் கூட்டம் இந்த ரயில் நிலையங்களில் வெகுவாக இருக்கும். ஆனால், தேஜஸ் ரயில் இந்த ரயில் நிலையங்களில் நிற்காது என்பதால் செங்கல்பட்டு பயணிகளும், தாம்பரம் பயணிகளும், மதுரை செல்லவேண்டுமென்றால் எக்மோர் வரவேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. அதேபோல அதிக அளவு டிக்கெட் கட்டணம், திருப்தியளிக்காத உணவு ஆகியவை இந்த ரயிலின் பெரும் குறைகளாக உள்ளது. இதை சரி செய்தாலே இந்த ரயிலால் பயணிகளை அதிகம் ஈர்க்கும் என்று ரயில் பயணிகள் கூறியுள்ளனர்.




மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண