இணையத்தில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகள்! என்ன செய்ய வேண்டும்?- சௌமியா அன்புமணி சொல்வதை கேளுங்க!
பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறையவே இல்லை. மாறாக, புதுவிதமான வன்கொடுமைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்றன.

சென்னை பல்கலைக்கழகத்தில் 6ஆவது சர்வதேச மற்றும் 45ஆவது இந்திய குற்றவியல் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தகவல் தொழில்நுட்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை பற்றிய அமர்வில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும் முனைவருமான சௌமியா அன்புமணி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’வருடாவருடம் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தின விழாவை நாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். ஆனாலும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறையவே இல்லை. மாறாக, புதுவிதமான வன்கொடுமைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்றன.
பன்னெடுங்காலமாகவே பெண்கள் பாதுகாப்பு என்பது பொதுவெளியிலும், கல்விக் கூடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும், ஏன் அவரவர் இல்லங்களில் கூட கேள்விக்குறியாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் கூட அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை.
கேலி செய்வது, வக்கிரமாக திட்டுவது, ஏமாற்றுவது, பண மோசடி செய்வது, பிடிக்கவில்லையென்றாலும்கூட பின் தொடருவது போன்ற செய்கைகளால் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் வக்கிரமாக, வன்மமாக பதிவு செய்யப்படுவதால், மகளிர் பலர் இணையத்தில் பயணிக்கவே பயப்படுகின்றனர். தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முன்வருவதில்லை.
இணையத்தில் பாலியல் துன்புறுத்தல்கள்
பெண் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பிரபலமானவர்கள், பெண் தொழிலதிபர்கள், திரைத் துறையினர், குடும்பத் தலைவிகள் என பலரும் சமூக வலைதளத்தில் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு அஞ்சி, மனநிம்மதியை இழக்கிறார்கள். இணையத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள், நேரிடையாக அவர்களுக்கு நடப்பதால் உயிருக்கும், கௌரவத்திற்கும் அஞ்சி பல பெண்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் வக்கிரமாக திட்டிவிட்டால் மன உளைச்சலும் ஏற்படுகிறது. குறிப்பாக, வன்மமான பேச்சிற்கு பலர் ஆமோதித்து கருத்துகளை பதிவிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இணையத்தில் பயணிப்பவர்கள் பலர் தங்கள் அடையாளங்களை மறைத்து, போலி முகவரி, போலி புகைப்படங்கள் கொடுத்து, பெண்கள் பலரை ஏமாற்றுகின்றனர். கும்பலாக தவறு செய்யும்போது, முகம் தெரிவதில்லை. அதுபோல, இணையத்தில் உண்மை முகம் தெரியாததால், குற்றம் செய்பவர்களுக்கு அதுவே மிகப்பெரிய பலமாக, ஆயுதமாக அமைந்துவிடுகிறது.
இதற்குத் தீர்வு என்னவென்றால், முதலில் நம் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் நம்பிக்கையையும், தைரியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். புகையிலைக்கும், மதுவுக்கும், போதை பொருளுக்கும் “வேண்டாம்” என்று சொல்வதைப்போல, மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக் கூடாது என்ற தன்னம்பிக்கையை நிச்சயமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
குடும்ப மானம்
குடும்ப மானம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொதுவானது என்பதை இருபாலருக்கும் சமமாக கற்பிக்கப்பட வேண்டும். குடும்பமும், சட்டமும், காவல்துறையும், நீதித்துறையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் பாதுகாப்பாக, அரணாக எல்லா காலகட்டத்திலும் துணை நிற்க வேண்டும்.
2000ஆம் ஆண்டு இணையத்தில் ஏற்படும் பொருளாதார குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் தனிச்சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல 1986-ல் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் அச்சு ஊடகங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டங்களும் இந்தியாவில் இயற்றப்பட்டன. ஆனால், காலங்கள் மாறும்போது, புது சட்டங்கள் காலத்திற்கேற்றாற்போல மாற்றங்களுடன் கொண்டு வரப்பட வேண்டும்.
சைபர் குற்றவியல் நீதிமன்றங்கள் வேண்டும்
ஆபாச சித்தரிப்புகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்ற வழிவகை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிராக ஏற்படும் இணைய குற்றங்களை ஆராய மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இணைய குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் வேண்டும். மகளிர் நீதிமன்றங்கள், போக்சோ நீதிமன்றங்கள்போல சைபர் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். பல இணைய பொதுவெளி தளங்கள் வெளிநாடுகளில் இருப்பதால், உலகளாவிய பொதுவான சட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.
தொழில்நுட்பத்தால் நன்மையும் பெற்ற அதே சமயம், தீயதையும் அனுபவிக்கும் அனைத்து மகளிருக்கும் வன்முறையற்ற சமுதாயத்தையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்ட ஒருவரையும் விட்டுக்கொடுக்காது, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேறுவோம்’’.
இவ்வாறு சௌமியா அன்புமணி பேசினார்.