Teachers Strike: இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி:
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இடைநிலை ஆசிரியர்களில் ஒருவரான ராபர்ட் எனும் ஆசிரியர் கூறிகையில், “ இதற்கு முன்னர் தான் பள்ளிக் கல்வித்துறையிடம் நிலுவைத் தொகை எதையும் கேட்கவில்லை. நாங்கள் கேட்பது இனி வரும் காலங்களிலாவது எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளிக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சர், ஓரிரு தினங்களில் முதலமைச்சரைச் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்திருக்கிறார். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படைஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள்:
இதையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கையை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.