தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


ரூ.400 கோடி விற்பனை:


மதுபானக் கடைகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படும் என்பதால் கடந்த ஓரிரு தினங்களாகவே, தமிழ்நாடு முழுவதும் இருந்த மதுபானக் கடைகளில் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று மதுபான விற்பனை படுஜோராக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.


இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று மட்டும் வழக்கத்தை விட விற்பனை இரண்டரை மடங்கு அதிகமாக நடைபெற்றுள்ளது. வழக்கமாக, மதுபானக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூபாய் 150 கோடி இருக்கும். நேற்று மட்டும் இரண்டரை மடங்கு அதிகமாக விற்பனை நடைபெற்றுள்ளதால் ரூபாய் 400 கோடி வரை மது விற்பனை நடைபெற்றுள்ளது.


குவிந்த குடிமகன்கள்:


குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மது விற்பனை அதிகளவில் நடந்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில், ஒரு சில கடைகளில் வழக்கத்தை விட 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது என்று தெரிவித்தனர்.


தமிழ்நாடு முழுவதும் மதுவிற்பனை நேற்று படுஜோராக நடைபெற்றதால், பல பகுதிகளில் மதுபான கடைகள் முன்பு கூட்டம் இருந்தது. இதைக்கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதிக்கு அடுத்த நாள்தான் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. மதுபானக் கடைகளில் ஒரு நபருக்கு 4 குவார்ட்டர்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உத்தரவு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


3 நாட்கள் கடைகள் மூடல்:


வரும் 20ம் தேதி மீண்டும் திறக்கும் கடைகள் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தி காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மூடப்பட உள்ளது. இதன் காரணமாகவும், தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 400 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளதாலும், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாலும் சட்டவிரோதமாக மதுபானத்தை பதுக்கி யாரேனும் விற்பனை செய்கிறார்களா? என்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


வழக்கமாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது மதுபான விற்பனை இதுபோன்று 100 கோடிகளுக்கு மேல் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.