அண்மையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்த பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் எனவும், கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிப்பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர் ”மதுவிற்பனை செய்து வருமானம் ஈட்ட வேண்டிய நிலை அரசுக்கு இல்லை. டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தை மாற்ற ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் கடையை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை திறக்கவேண்டும் மது பிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து பரிசீலனையில் உள்ளது. இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.  


இன்று சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். மேலும் டாஸ்மாக் கடைகளில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மாக் குறித்து வந்த குற்றச்சாட்டுகள் சில கடைகளில்தான் உள்ளது. ஆனால் அது அனைத்து கடைகளிலும் உள்ளது போல் பிரபலப்படுத்தப்பட்டுவிட்டது. அதையும் ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். பார் நடத்துவதற்கு யாரிடம் உரிமம் உள்ளதோ அவர்கள் தான் பார் நடத்த முடியும் என கூறியுள்ளார். லைசைன்ஸ் பெற்றிருப்பவர்கள் பார் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டதோ அவற்றை முறையாக பின்பற்றவேண்டும்” என கூறியுள்ளார். 


மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ” பார்கள் சரியான முறையில் தான் நடத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளை முறையாக கண்காணிக்க அறிவுருத்தியுள்ளோம். இந்த கண்காணிப்பு முழுமையான கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சில கடைகளுக்குப் பக்கத்தில் அனுமதி இல்லாமல் பார் நடத்தினால் அதனை மூடவும் அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, 500 கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மக்கள் வேறு கடைகளுக்குச் சென்று மது வாங்குகிறார்களா? அல்லது மது பழக்கத்தை விட்டுவிட்டார்களா என அதிகாரிகளை கண்காணிக்க அறிவுருத்தியுள்ளோம் எனவும், மக்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டால் அதைவிட மகிழ்ச்சி அரசுக்கு வேறு எதுவும் இல்லை”  என அமைச்சர் கூறியுள்ளார். 


மேலும் அவர், “ மக்கள் வேறு டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கினால் கூட பரவாயில்லை மாறாக, வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையால் அரசுக்கு வருமானம் ஈட்டவேண்டிய அவசியம் இல்லை. டார்கெட் வைப்பது, டார்கெட் குறைந்து விட்டால், மக்கள் அதனால் மதுவை கைவிட்டுவிட்டார்கள் என்றால் மகிழ்ச்சி, மாறாக டாஸ்மாக்கிற்கு பதில் வேறு எதாவது காரணம் இருந்தால் அது கண்டறியப்பட்டு அது தடுக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்கு தான் டார்கெட் செட் செய்யப்படுகிறது” என அமைச்சர் கூறினார். 


மேலும், டெட்ரா பாட்டில்களில் மது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனவும் , 90 மில்லி லிட்டர் அளவிலும் மது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் கூறினார்.