Continues below advertisement

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது பாட்டில் வாங்கியவரிடம் எம்ஆர்பி-யை விட அதிகமாக வசூலித்த கடை ஊழியர், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Continues below advertisement

மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வசூலித்த கடை ஊழியர்

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு முதன்மையான வருமானமே டாஸ்மாக் மூலம் தான் வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட(MRP) கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், மாதவரத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். அப்போது, கடை விற்பனையாளர் அவரிடம் 250 ரூபாய் வசூலித்துள்ளார்.

இதையடுத்து, பாட்டிலில் 240 ரூபாய்தான் போட்டிருக்கிறது என விற்பனையாளரிடம் தேவராஜன் கேட்டுள்ளார். ஆனால், விற்பனையாளர் எந்த ஒரு பதிலையும் கூறாமல் புறக்கணித்துள்ளார். இதனால் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர்

மேலும், கோபமடைந்த தேவராஜன், விற்பனையாளர் தன்னிடம் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி வழங்கிட உத்தரவிட வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும், நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.

நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள், கூடுதல் பணம் வசூலிப்பது என்பது ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று கூறி, மாதாவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

மேலும், அந்த கடை விற்பனையாளர், தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அப்படி 2 மாதத்திற்குள் வழங்காவிட்டால், ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுபோன்ற தீர்ப்புகளை பார்த்தாவது, டாஸ்மாக் ஊழியர்கள் திருந்துவார்களா என்பதே, மதுப்பிரியர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.