டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவுறுத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்.பி.ஐ அறிவித்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பதிவில்,  டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவுறுத்தவில்லை என்றும், முற்றிலும் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். 


நேற்று  ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தது. 2023 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.


2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.


பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016-ஆம் ஆண்டு  இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24-இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனையை திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கில்,போதுமான அளவில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்து, பின்னர் 2018-19 ஆண்டு காலக்கட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.


பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் 4 முதல் 5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சாதாரணமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. 


இக்காரணங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியின் தூய்மையான ரூபாய் நோட்டு கொள்கையின் படி, 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது. 


மேலும் படிக்க 


Gold, Silver Price: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை...நகைப்பிரியர்கள் ஷாக்... இன்றைய நிலவரம் இதுதான்..


IPL 2023, DC vs CSK: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு.. டெல்லி அணியுடன் இன்று மோதல்.. வரலாறு சொல்வது என்ன?