மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது. 


இதையடுத்து, வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது, “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை em.10/- உயர்த்தப்பட்டுள்ளது.


மேற்கண்ட உயர்வின் அடிப்படையில் 375 மி.லி. , 750மி.லி., 1000 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.